புதன், 26 பிப்ரவரி, 2014

பற்றி எரிந்த தீ: ஹீரோவாக மாறிய பூனை

 பிரான்சின் பிலேஸ் பகுதியின் பண்ணை வீடு ஒன்றில் கடந்த 23ம் திகதி தீப்பற்றி கொண்டது.
பிரான்சில் செல்லப்பிராணியாய் வளர்க்கப்பட்டு வந்த பூனைக்குட்டி பலரை தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.
அப்போது அவ்வீட்டிலிருந்தோரை காப்பாற்றும் நோக்கில் வீட்டாரால் வளர்க்கப்பட்டு வந்த 'Meatball' என்ற பூனைக்குட்டி வீட்டின் பரணை கீறி சத்தம் எழுப்பியுள்ளது.
இச்சத்ததை கேட்டு அந்த வீட்டு பெண் ஒருவர், தீ பரவுவதை தவிர்க்க மின்சாரத்தை துண்டித்து தீயணைப்பு படையினருக்கு தகவலளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததுடன்,உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுத்தனர்.
இச்சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த 11 பேர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களும் பூனைக்குட்டியினால் காப்பாற்றப்பட்டனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதியிலுள்ள நபர் ஒருவர், பூனைக்குட்டி உண்பதற்காக அது வாழும் காலம் வரை Boulette என்ற உயர்தர பிஸ்கேட்டை வாங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

இந்தியாவின் 30வது மாநிலம் வட மாகாணம் அல்ல:

 


இலங்கையின் வடக்கு மாகாணம் இந்தியாவின் 30வது மாநிலம் அல்ல என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணமானது இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாம்மில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கப்பல் மற்றும் விமான சேவைகளை நேரடியாக ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்கள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.  காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தினால் பிரிவினைவாதம் தலைதூக்கும் என தெரிவித்திருந்தோம்.


அதேபோல் வடக்கு மாகாணசபை பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா எமக்கு பாடம் கற்பித்துள்ளார்.  ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய அவர் முயற்சிக்கின்றார்.

மாநில அதிகாரத்தை பயன்படுத்தியே அவர் இவ்வாறு செய்ய முயற்சிக்கின்றார்.

இலங்கையில் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கினால் நாடு பிளவுபடக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 19 பிப்ரவரி, 2014

சபையில் அனுமதி சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை

புகைத்தல் சௌக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பதனை எடுத்துக்காட்டுகின்ற படங்களை சிகரெட் பெட்டிகளில் பிரசுரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகரின் கையொப்பத்திற்கு பின்னர் அது சட்டமாகும்.

இந்த எச்சரிக்கை படங்களை சிகரெட் பெட்டிகளில் பிரசுரிப்பதற்கு சுகாதார அமைச்சு முயற்சித்த போதிலும் அந்த முயற்சிக்கு எதிராக புகைப்பொருள் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றமையினால் அந்த முயற்சி கைகூடவில்லை.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பதியத் தவறியோருக்கு புதன்கிழமை சந்தர்ப்பம்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர்.

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன் கடந்த 5 ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பிரகாரம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியமர்வுக்கான உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட கேணல் ஈஸ்வரனுடன் கடந்த வெள்ளிக்கிழமை மீளவும் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதற்கமைய மீள்குடியமர்வு தொடர்பிலான விவரங்களைத் திரட்டுவதற்காக பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இது வரை பதிவு செய்யாதவர்களை நாளை மறுதினம் புதன்கிழமைக்கு முதல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் மற்றும் மருதனார் மடம் பாரதி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.